சென்னை: ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வாரிய பணிகளை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், "தமிழக ஆளுநர் அவரது அதிகாரங்களின் எல்லையை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநரை கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆளுநரின் வேலை ஒரு தபால்காரர் வேலைதான். ஆனால், அவர் தேவையில்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் பொறுப்பு என்பது அரசு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு பொறுப்பு என்றும், அப்படி ஒரு மாதிரியான பொறுப்பை வாங்கிக் கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை, இதுபோன்று சிரமத்துக்குள்ளாக்கி வருவதாகவும், மேலும் மத்திய அரசு துணை ஜனாதிபதி அல்லது வேறு ஏதேனும் உயர் பொறுப்புகளை வழங்கும் என்ற ஆசையில் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளை ஆளுநர் ஆர்.என். ரவி செய்து வருவதாக சாடினார்.
மேலும், "ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார். தமிழ்நாடு அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ராஜ் பவன் வெளியிட்ட செய்தி குறிப்பு இந்த நிலையில் தமிழக ஆளுநர் மாளிகை குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பொதுவெளியில் பேசியதற்க்கு அளித்துள்ள விளக்கத்தில், "ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றம்சாட்டியதாக மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 24, 2023 அன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டு 'நடந்த உண்மைகள்' என தலைப்பிட்டு விளக்கமளிக்கப்பட்டு இருந்தது. அவை, ஆளுநர் 2022 பிப்ரவரி 21 முதல் 23 வரை அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தியதும், ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர் என்றும், ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், விருந்தினர்கள் மட்டுமின்றி ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும், அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், ராஜ் பவன் சமையலறையை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்து இருந்தனர்.
விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுவதாகவும், அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவனைத்தையும் ஆளுநரே ஏற்று வருகிறார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தது.
இதையும் படிங்க: ‘பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்!