சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் ஃபெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றது முதல் மூன்று ஆண்டுகள் வரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பார்.
இவர் கடந்த 32 ஆண்டுகள் கல்வி மற்றும் நிர்வாகப் பணியில் அனுபவம் வாய்ந்தவர். தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், தற்போது பொறுப்பு துணைவேந்தராகவும் இருந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியர் பணியில் அனுபவம் மிக்கவர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்ததுடன் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், மூட்டுக்காட்டில் உள்ள மீன்வளப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், சென்னையில் உள்ள முதுகலை மீன்வளப் பட்டப்படிப்பு நிறுவனத்தின் முதல்வர் பொறுப்பாகவும், மாதவரத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வர் என பல்வேறு பதவிகளிலிருந்துள்ளார்.
மேலும், பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளதுடன் புத்தகங்களை ஆராய்ச்சி செய்து கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டு, சில விருதுகளையும் பெற்றுள்ளார் எனத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அதிகாரம் பெற்ற தகுதியான வேந்தர் பதவியை முதலமைச்சருக்கு மாற்ற வேண்டுமெனச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்கள் தற்போது குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஃபெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்கு கடந்த மாதம் சட்டப்பேரவையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது, அதிமுக சார்பில் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் என திமுக அரசு மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் தரவில்லை.
எனவே, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.. முதலமைச்சருடன் ஆலோசனை!