இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் எனப் போற்றிக் கொண்டாடுமளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, திராவிட -தேசிய கட்சிகளின் அரசியல் தவறுகளால் தனது நிலப்பகுதிகளைப் பெருமளவு இழந்தபோதும் தமிழர்கள் தேசிய இனம் எனப் பறைசாற்றும் பெருமையோடு தமிழர்களின் பெருந்தாயகமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.
உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்பில் தங்கள் தாய்மொழியின் அடிப்படையிலேயே நாடுகளாக உருவாகி தங்களுக்கெனப் பண்பாட்டு அடையாளங்களோடு திகழ்ந்து வருகின்றன. மொழி தான் ஒரு தேசிய இனத்தின் முகமும், முகவரியுமாகத் திகழ்கிறது. அந்த வகையில் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனங்கள் மொழிவாரி மாநிலங்களாக 1956ஆம் ஆண்டு பிரிந்தன.
அதன் தொடர்ச்சியாக உலகெங்கும் பரவி வாழும் 12 கோடிக்கும் மேலான தமிழர்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு ஒரு மாநிலமாக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது.