தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்குவமற்ற வயதில் வரும் காதல் திருமணம் தடுத்திட பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் - ராமதாஸ்! - Raise the age of marriage for women to 21 to prevent immature love marriage

சென்னை : பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பக்குவமற்ற வயதில் வரும் காதல் திருமணம் தடுத்திட பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் - ராமதாஸ் !
பக்குவமற்ற வயதில் வரும் காதல் திருமணம் தடுத்திட பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் - ராமதாஸ் !

By

Published : Aug 18, 2020, 8:09 PM IST

இது தொடர்பாக அவர் இன்று(ஆக.18) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"உலகில் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதற்கான காரணங்களில் முதன்மையானது பெண்களுக்கு இளம் வயதில் திருமணமாவதும், இளம் வயதிலேயே அவர்கள் தாய்மையடைவதும் தான்.

அவர்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கும் நீடிப்பதால் இந்தியாவில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெண்களின் திருமண வயது 21ஆக உயர்த்தப்பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை.

அந்த வகையில் மத்திய அரசின் திட்டம் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும். உடல்நலம் மற்றும் நுண்ணூட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, சமூகச் சீரழிவுகள் சார்ந்த சிக்கல்களை தடுப்பதற்கும் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டியது அவசியமாகும். பதின்வயதில் உள்ள பெண் குழந்தைகள் காதல் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடக்கின்றன.

பெரும்பான்மையான காதல்கள் பெண்ணின் அன்பை இலக்காகக் கொள்ளாமல், பெண் சார்ந்த குடும்பத்தின் சொத்துகளை இலக்காகக் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய பக்குவமற்ற காதலின் விளைவாக நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலானவை ஒரு சில ஆண்டுகளிலேயே தோல்வியடைகின்றன.

அதனால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, அந்த பெண்ணின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகங்களும் அதிகமாக நடக்கின்றன. அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியப் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர்.

ஆனால், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் தான் பெரும்பான்மையான பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன. பெண்கள் சாதிப்பதற்கு வறுமையை விட பெரும் சுமையாக இருப்பவை இந்த இரண்டும் தான். அந்தத் தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

பெண்கள் கல்வியிலும், பிற துறைகளிலும் சாதனை படைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details