சென்னை:கடந்த சனிக்கிழமை முதல் வடகிழக்குப்பருவ மழை தொடங்கி நேற்றும், இன்றும் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக, ஆவடி காவல்நிலையத்தைச்சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் காவல்நிலையத்தை அணுக முடியாத நிலையில் உள்ளார்கள். காவல்துறையினர் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால் முழங்கால் அளவிற்கு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் விசாரணையை மேற்கொள்ள முடியாமல் அவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். காவல் நிலையத்தில் வரவேற்பு அறை, கைதிகள் சிறை என அனைத்து அறைகளிலும் மழை நீர் புகுந்து இருக்கிறது. மழை நீர் முட்டி வரை தேங்கி நிற்பதால், ஆவடி காவல் நிலையத்தில் பணிகள் முடங்கி இருக்கின்றன.
ஆவடி காவல் நிலையத்திற்குள் மழை நீர் - அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு இந்த நிலையில் காவல் நிலையத்தில் வெள்ளப்பாதிப்பை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அலுவலர்களிடம் உடனடியாக மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ராட்சத மோட்டாரின் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க:ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க! - ஓபிஎஸ்