சென்னை:சென்னை மாநகராட்சிப் பகுதியில் கோடைகாலத்தில் வழக்கமாக ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர், மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மழைநீர் சேகரிப்புக்கிணறுகள் அமைப்பது குறித்த அறிவிப்புக்கு, வரவேற்பு என்பது சென்னைவாசிகள் மத்தியில் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மழைநீர் சேகரிப்பு மையத்தின் உறுப்பினர்கள் கூறும்போது, கடந்த ஆண்டுகளில் சென்னையில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போகும்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இதனைச் சரிசெய்ய சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாய நிலைமை ஏற்பட்டது.
எனவே, கடந்த 2003ஆம் ஆண்டில் மழை நீரை வீணாகாமல் இருக்க 'மழை நீர் சேகரிப்பு' என்ற திட்டம்' மழை சேகரிப்பு' என்ற மையத்தால் முன்மொழியப்பட்டு நகரங்களில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மழைநீர் தேங்கும் இடங்களில் மழை நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இது ஒரு நல்ல முடிவை தந்தது என்கிறார்கள், நீரியல் நிபுணர்கள்.
மழைநீர் தொட்டி அமைக்க உதவும் தன்னார்வ அமைப்புகள்: இதுகுறித்து மழை சேகரிப்பு மையத்தின் நிறுவனர் சேகர் ராகவன், கூறும்போது, "இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்களது மையம் விப்ரோ (Wipro Limited) என்ற கம்பெனியுடன் கைகோர்த்து சென்னையில் 40 மழைநீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி கிணறுகளை அமைக்க விரும்பும் குடியிருப்புவாசிகள் 50 விழுக்காடு பணம் கொடுக்க வேண்டும்.