சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னையில் மழை பெய்தால் தேங்காமல் இருக்க 2,624 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் மற்றும் 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு 33 நீர்வழிக் கால்வாய்களை பராமரித்து வருகிறது. தற்போது அந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், “அடையாறு மற்றும் கூவம் வடிநிலப் பகுதிகளில் உலக வங்கி நிதியில், 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளினால் அம்பத்தூர், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதிவாழ் மக்கள் பயனடைந்துள்ளனர்.
கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில், 769 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.3 ஆயிரத்து 220 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 68 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் திருவொற்றியூர், மணலி, மாகவரம் மற்றும் அம்பத்தூரில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.
கோவளம் வடிநிலப்பகுதியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.1.714 கோடி மதிப்பீட்டில் KFW வங்கி நிதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது M1 மற்றும் M2 திட்டக்கூறு பகுதிகளில் 160 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சுமார் ரூ.598 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 60 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் நங்கநல்லூர், கண்ணன் காலணி, மயிலை பாலாஜி நகர், புவனேஸ்வரி நகர், புழுதிவாக்கம், கண்ணகி நகர், எம்சிஎன் நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.
மேலும், M2 திட்டக்கூறு பகுதிகளில் ரூ.735 கோடியில் 122.85 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளது. இப்பணிகளினால் ஸ்ரீராம் அவென்யூ, கண்ணப்ப நகர், கசூரா கார்டன் நகர், ரேடியோ நகர், செக்ரடேயட் காலணி, ஒக்கியம் துரைப்பாக்கம், ஜோதி நகர், பாரதியார் நகர், இந்திரா நகர், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பயடைவார்கள்.
2021ஆம் ஆண்டு பருவமழையின்போது, சென்னை நகரின் மழைநீர் தேங்கியதால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசால் திருப்புகழ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) தலைமையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கையைப் பரிந்துரைத்தற்காக ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் குழுவின் பரிந்துரையில், பல்வேறு திட்டங்களின் கீழ் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.