தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்... பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க மாநகராட்சி வேண்டுகோள்... - Rainwater drainage work

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணி : பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டுகோள்
சென்னையில் மழைநீர் வடிகால் பணி : பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டுகோள்

By

Published : Oct 24, 2022, 12:43 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த பருவமழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அமைக்கப்பட்ட சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மை குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மழைநீர் வெளியேற ஏதுவாக மூடிய பெருவடிகால் அமைக்கும் பணிகளும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் மற்றும் சேவை துறைகளான தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி மற்றும் குழாய் பதிப்பு பணிகள் தொடர்பான இடங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்க ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர, சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத இடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவ்விடங்களிலும் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்மந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லாமல் முறையாக தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தி தொலைக்காட்சி ஊழியர் பலி; முதலமைச்சர் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details