இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தற்பொழுது தென் தமிழ்நாடு, குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்திலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்திலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவிவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 14 செ.மீ. மழையும் பெரியநாயக்கன்பாளையத்தில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்துவரும் இரு தினங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வட தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.