சென்னை: தமிழகத்தில் தற்போது, வடகிழக்கு பருவமழையானது பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக நாகை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், புதுச்சேரி, மேலும் சில டெல்டா மாவட்டங்களில் கன மழையானது பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை (நவ-14) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15ஆம் தேதி நிலவக்கூடும்.
அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு - வடகிழக்கு திசையில் கடந்து, ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.