அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தர்.
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டெங்கு, டைபாய்டு மற்றும் புளு காய்ச்சல் போன்ற பருவ கால நோய்கள் பரவாமல் இருக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் மழைக்கும் பின்னர் ஏற்பட்டுள்ள குப்பை குளங்களை அகற்றுவதற்கு 5,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக, 4 மாவட்டங்களில் மொத்தம் 300 மழைக்கால முகாம்கள் நடத்தப்படுகிறது. அதில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள சுமார் 5,500 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு, தங்கும் வசதி மற்றும் மருத்துவ உதவிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது
அண்டை மாவட்டங்களிலில் இருந்து, நடமாடும் மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள மருத்துவர்கள் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் குழு, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரடியாகச் சென்று, வருகிற 10ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது.
தினமும் 4 முதல் 5 இடங்களுக்கு ஒரு மருத்துவக் குழுவினர் சென்று, பொதுமக்கள் எவருக்கேனும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல்வலி இருப்பின், அவர்களுக்கு சிகிச்சை அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் முககவசம் அணிந்து, தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொதுமக்கள் மருத்துவமனையை அணுக வேண்டும், தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது.
மழையானது நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியவுடன், நீரின் அளவு வடியத் தொடங்கி இருக்கிறது. ஒரு 60 சதவீதம் மழை நீர் வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
அனைத்து ஏரிகளும் நிரம்பிய நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40 ஏரிகளில் உள்ள உபரி நீர், அந்தப் பகுதிகளில் சூழ்ந்து இருக்கிறது. அடையாறு ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்து வருவதாலும், கடலில் சீற்றம் குறைந்து 30 வாரங்களில் தண்ணீர் அதிக அளவில் செல்வதாலும், இன்னும் 7 மணி நேரத்தில் அனைத்து மழைநீரும் வடிந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மழை நின்று 2 நாட்களாகியும் வடியாத வெள்ள நீர்.. அவல நிலையில் உள்ள அரும்பாக்கத்தின் கழுகுப்பார்வை காட்சிகள்!