சென்னை:தமிழகத்தில் வரும் 20ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும். சென்னை - தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் வரும் 17 ஆம் தேதி அன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 19ஆம் தேதி வலுபெற்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக்.15) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி காரணமாக, 15-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகின்ற அக்.16-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.