சென்னை:மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை தற்போது குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம் புயல்' காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிகனமழையாக பெய்து வரும் நிலையில், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் வரலாறு காணாத மழையின் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால், சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் ரயில் சேவை, விமான சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டன.