சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் கனமழை பெய்த நிலையில், பிறகு படிப்படியாக மழை குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பனிப்பொழிவு நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(நவ.25) முதல் வரும் 29ஆம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.