சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (டிச. 2) காலை முதல் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புயல் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திரா கடற்கரை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு உள்படப் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள் வழியாகச் செல்லும் 118 ரயில்கள் ரயில்வே துறையால் ரத்து செய்யப்பட்டன. தற்போது, ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில், இரண்டு ரயில்களை மட்டும் திரும்ப இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.