ரயில்வே தட்கல் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிகார் மாநிலம் தனபூர் பகுதியில் வசித்து வந்த சைலேஷ் யாதவ் (27) என்பவரை திருவண்ணாமலை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சைலேஷ் யாதவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சைலேஷ் யாதவ் தனியாக tatkalsoftwareall.in என்ற வெப்சைட்டை உருவாக்கி, ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் தரகர்களுக்கு SHARP, NEXUS, BMX PLUS உள்பட 10 சட்டவிரோத சாப்ட்வேர்களை ஆயிரக்கணக்கான நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
குறிப்பாக இந்த சட்ட விரோத சாப்ட்வேர்கள் மூலம் ஒவ்வொரு நாளைக்கும் 7,000 டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் 1,25,460 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு சாப்ட்வேரை 2,000 முதல் 3,500 ரூபாய் வரை ஆன்லைன் மூலமாக சைலேஷ் யாதவ் விற்பனை செய்துள்ளார். அதேநேரம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதற்கு TSA group என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து பயிற்சி அளித்துள்ளார். இவை தவிர Telegram மற்றும் whatsapp ஆகியவை மூலமாகவும் சாப்ட்வேர் வாங்கும் நபர்களுக்கு சைலேஷ் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
Anydesk போன்ற சாப்ட்வேர் மற்றும் செயலிகளை பயன்படுத்தி அவற்றை வாங்குபவர்களுக்கு, தான் இருந்த இடத்திலிருந்து இந்தியா முழுவதும் சாப்ட்வேர் குறித்து பயிற்சி அளித்துள்ளார். மேலும் சர்வதேச எண்களை வைத்து வெளிநாட்டில் இருந்து இந்த சாப்ட்வேர்களை வாங்கி சைலேஷ் தனது வெப்சைட் மூலம் விற்பனை செய்துள்ளார்.