சென்னை :கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (செப்.1) மீண்டும் திறக்கப்பட்டது. கல்லூரி திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு அசம்பாவித சம்பவங்களால் பஸ்-டே உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்றைய தினம் கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் மேற்கொண்டு கல்லூரிக்கு வந்து செல்லும் இருவேறு கல்லூரி மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகின.
பின்னர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்கமாக சென்னை வரும் ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ரயில்வே காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.