சென்னை: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாகப் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. ரயிலுக்கு தீ வைக்கப்பட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் வடமாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் ரயில் தீ வைப்பு காரணமாக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. பெங்களூரிலிருந்து சென்னை பெரம்பூர் வழியாகப் பீகார் மாநிலத்தில் உள்ள தானாப்பூருக்கு செல்லக்கூடிய சங்கமித்ரா விரைவுவண்டி பாதுகாப்பு கருதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வட இந்தியர்களால் நிரம்பி வழிந்தது, பலர் தற்போது உள்ள நிலைமை சீரானதும், வடமாநிலங்களுக்குச் செல்வதாகவும் அதுவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருக்க முடிவு செய்து பலர் ரயில்வே நிலையத்திலேயே தங்கியுள்ளனர். வட மாநிலங்களில் நிலவும் கலவரம் காரணமாக ரயில்வே நிர்வாகம் சுமார் 3000 பயணிகளுடன் இருந்த சங்கமித்ரா ரயிலை மீண்டும் புறப்பட்ட இடமான பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.