சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயிலானது கடந்த 23ஆம் தேதி இரவு 9 மணி அளவில் புறப்பட தயாராக இருந்துள்ளது. அங்கு பெண்கள் கோச்சில் பாதுகாப்பு பணியில் ஆர்.பி.எஃப் காவலர் ஆசிர்வா (29) என்பவர் இருந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்கள் கோச்சில் ஏற முற்பட்டதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த ஆசீர்வா, இது பெண்கள் கோச் எனவும், இதில் ஏறக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆர்பிஎஃப் காவலரான ஆசிர்வாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில், காயமடைந்த ஆசிர்வா ஓடும் ரயிலில் இருந்து இறங்கி, உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆசிர்வாவை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் காவலரை கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து பெண் காவலரின் கழுத்தில் கத்தியால் குத்திய நபரை அடையாளம் கண்டு, அவரை கைது செய்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் தனசேகர் என்றும் விழுப்புரம் அடுத்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியுடன் சென்னை பூக்கடை பகுதியில் உள்ள பிளாட்பார்மில் தங்கி பூ, பழ வியாபாரம், செல்போன் பவுச்சுகள் போன்றவற்றை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.