சென்னைஅடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் சரஸ்வதி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சியாமளா (50). இவர் தனது மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர வேண்டும் என தனக்கு தெரிந்த உறவினர்களிடம் விசாரித்து வந்து உள்ளார். இந்த நிலையில், சியாமளாவின் குடும்ப நண்பரான அயனாவரம் பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரியும் சிவகுமார் என்பவரிடம், ரயில்வே துறையில் வேலை கிடைப்பது தொடர்பாக யாரிடமாவது கேட்டு சொல்லுங்கள் என சியாமளா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிவகுமார் அஞ்சுகம் என்ற பெண்ணை சியாமளாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தொடர்ந்து, ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் உடனே கட்ட வேண்டும் என்றும், அப்படி கட்டினால் உடனடியாக ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் அஞ்சுகம் தெரிவித்துள்ளார். எனவே, கடந்த ஆண்டு அடையாறு பணிமனை அருகில் வைத்து 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக சியாமளா அவர்களிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், நீண்ட நாட்களாக ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சியாமளா, வேலை வாங்கித் தரவில்லை என்றால், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என சிவகுமார் மற்றும் அஞ்சுகத்திடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல் அவர்கள் நீண்ட நாட்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சியாமளா, இது குறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் முதலில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து சுமார் ஐந்து தவணையாக நான்கு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதேநேரம், மீதம் உள்ள 10 லட்சம் ரூபாயை திருப்பி தருவதாக கூறி பல மாதங்கள் ஆகியும் தராமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
இதனால் நீண்ட நாட்கள் ஆகியும் தனது பணத்தை திருப்பி தராததால், சியாமளா மீண்டும் இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து, தனது 10 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளார்.
கொல்கத்தா வரை சென்ற பலே மோசடி: சென்னை நெற்குன்றம் மல்லிகை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர், செல்வம் (43). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய நண்பர் வேலு. வேலுவின் மகள் லாவண்யா(23). இவர் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் வேலு தனது மகளுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர வேண்டும் என செல்வத்திடம் கேட்டுள்ளார்.
செல்வம் அவருக்கு பழக்கமான மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜான் என்கிற அன்பு செல்வத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் அன்பு செல்வம் கொல்கத்தாவில் ரயில்வே துறையில் ஆட்களை வேலைக்கு சேர்ப்பதாகவும், அங்கு தங்கள் மகளுக்கு கிளர்க் வேலை வாங்கித் தருவதாக கூறி 13 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
இதனையடுத்து ஒரு மாதம் கழித்து வேலுவின் மகள் லாவண்யாவுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. எனவே, வேலு, செல்வம் மற்றும் லாவண்யா ஆகிய மூவரும் கொல்கத்தா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரயில்வே நிலையத்தில் ஒரு நோட்டு புத்தகத்தைக் காட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டு, மீண்டும் தங்களுக்கு மின்னஞ்சல் வரும் என்றும், அப்போது வாருங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வம் மற்றும் அவரது நண்பர் வேலு ஆகியோர், இது குறித்து விசாரித்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து உள்ளனர்.
இதனையடுத்து தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு தனியார் பள்ளி ஆசிரியர் அன்பு செல்வத்திலும் கேட்டுள்ளனர். இதற்கு அன்பு செல்வம் 5 லட்சம் மற்றும் 6 லட்சத்திற்கு போலியான காசோலை கொடுத்து மீண்டும் மோசடி செய்துள்ளார். இதனால், மீண்டும் அவரிடம் சென்று பணத்தைக் கொடுங்கள், இல்லை என்றால் தங்கள் மீது புகார் கொடுப்பேன் என வேலு மற்றும் செல்வம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அன்பு செல்வம், பணம் கேட்டு வீட்டு பக்கம் வந்தால் கை காலை வெட்டி விடுவேன் என்றும், ஆள் வைத்து கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பல்க் ஆர்டர் எனக் கூறி ரூ.43 லட்சம் மோசடி... 3 வருடங்களாக போராடும் முந்திரி வியாபாரி.. பிளாட்பாரத்தில் பிழைப்பு நடத்தும் அவலம்!