சென்னை:வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லைவானி (56). இவரது மகன் சூர்யபிரதாபன் எம்.இ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். தில்லைவானியின் நண்பரான மணிமாறன் (37) தனக்கு ரயில்வேயில் அலுவலர்கள் தெரியும் என்றும் அதனால் ரயில்வே ஒதுக்கீட்டில் சூர்யபிரதாபனுக்கு ரயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாகவும் தில்லைவானியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய தில்லைவானி, மணிமாறன், அவரது நண்பர் நாகேந்திரன், லக்னோவை சேர்ந்த ஆர்.கே.சிங் ஆகியோரிடம் 12 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பின்னர் மணிமாறன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து, போலி பணிநியமன ஆணையை தயாரித்து சூர்யபிரதாபனிடம் கொடுத்து, லக்னோவில் டிடிஆர் போஸ்டிங் போடபட்டுள்ளதாகவும், அங்கு சென்று பணியில் சேர்ந்துகொள்ளும்படியும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி சூர்யபிரதாபன், டிடிஆர் உடையில் லக்னோ சென்று பணியில் சேர்வதற்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த உண்மையான டிடிஆர் சூர்யாவிடம் விசாரிக்க, நான் புதிதாக பணியில் சேர வந்த டிடிஆர் என பணி ஆணையை காண்பித்துள்ளார். பணி ஆணையை வாங்கி பார்த்தபோது, அது போலி என தெரியவந்தது.