சென்னை:சேத்துப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (அக்.22) கலந்துகொண்டு கூட்டுறவு சங்க அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் துறை செயலாளர் நசீமுதீன், பதிவாளர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், " வாக்குறுதி அறிவித்தபடி சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் கடனை பொறுத்தவரை முறைகேடுகள் இல்லாமல் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரனுக்கு கீழ் நகைகடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி குறித்த அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் 11 லட்சம் பயனாளர்கள் பலனடைவார்கள்.
2400 கோடி பயிர்கடன்
இதுவரை 2 ஆயிரத்து 400 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்கடன் அளிக்கப்பட்டுள்ளது.
சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டியை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கூட்டுறவு சங்கங்களில் 12 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதையடுத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரம் கோடி அளவில் கடன் தள்ளுபடி செய்திருப்பது இதுவே முதல்முறை. கூட்டுறவு துறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது, கிராமங்களில் 4 ஆயிரத்து 451 கூட்டுறவு வங்கிகள் ஆறு மாத காலத்திற்குள் கணினி மயமாக்கப்படும்.