சென்னை:லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம், சந்திரமுகி. இதில் நடிகர்கள் பிரபு, வடிவேலு, நடிகை ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஒரு ஆண்டு காலமாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பி.வாசு தனது 65வது படமாக ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.