சென்னை:நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் சந்திரமுகி 2 வெளியாக உள்ளது. மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு மற்றுமின்றி தனது அறக்கட்டளை மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். பல்வேறு மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள கே.கே நகரில் வசித்து வரும் எப்சிபா என்ற மாணவியின் கல்விச் செலவிற்காக பணவுதவி செய்து உள்ளார். இந்த மாணவி சிறு வயது முதலே லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் தான் படித்து வருகிறார்.
மேலும் அதே பகுதியில் வசிக்கும் தீபக் என்ற மாணவியின் பள்ளி படிப்பிற்கும் லாரன்ஸ் உதவி செய்து வருகிறார். இன்று மாணவி எப்சிபாவின் வீட்டிற்கு வந்த லாரன்ஸ் அவரது பாட்டி கலாவிடம் காசோலை கொடுத்து மாணவியை வாழ்த்தினார். மாணவி எப்சிபாவிற்கு பெற்றோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.