ரபேல் ஊழல் வழக்கு தொடர்பாக திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"உச்சநீதிமன்றம் ரபேல் ஊழல் வழக்கில் மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்து வழங்கிய ஆணை, மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு சரியான பின்னடைவு ஆகும்.
ரபேல் ஊழல் பற்றி மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, பேட்டி அளித்தவர்கள் பாஜக ஆட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
முன்னாள் பாஜக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, பொதுத்துறை பங்குகளை விற்ற முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி, பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் போன்றோர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இது குறித்து புலனாய்வு செய்திக் கட்டுரையாக இந்து குழுமத்தின் தலைவர் என். இராம் பல முக்கிய ஆவணங்களை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு கட்டுரை எழுதியதை, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் திருடப்பட்ட ஆவணங்கள் என்று கூறி, அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முதல் நாள் கூறி, எழுதியவரின் உறுதி மேலும் ஓங்கவே, மோடி அரசு அஞ்சி பின்வாங்கியதோடு, அந்த ஆவணங்கள் திருடப்பட்டவை அல்ல என்று பின்வாங்கி அந்தர்பல்டி அடித்தார்கள்.
இராணுவம் பற்றிய தகவல்கள் ரகசியம் என்றது ஆளும் தரப்பு. எதிர்தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே அவை வெளியிடப்பட்டது பயன்படுத்தியவை. அவை ரகசிய ஆவணங்கள் அல்ல. நீதிமன்றங்களில் வைக்கப்படக் கூடாத ஒன்றும் அல்ல என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகளும், திமுகவும் எடுத்து வைத்த வாதங்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறி சமாளித்த இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் நிராகரிப்பு நிலைப்பாட்டுக்கு என்ன பதில் கூறுவார்கள்?" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.