சென்னை: தி நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜன.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்கள் தமிழக பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். குறிப்பாக 1998 ஆண்டில் இருந்து இயங்கி வரும் தமிழக தலித் கட்சியின் தலைவர் உள்ளிட்ட 16 அமைப்புகள் சேர்ந்திருக்கின்றனர் என தெரிவித்தார்.
விருகம்பாக்கத்தில் திமுகவின் எம்பி கனிமொழி கலந்து கொண்ட நிகழ்வில் பாதுகாப்பு பணிகள் இருந்த இரண்டு பெண் காவல் அதிகாரிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது. நடக்கின்ற திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமல்லாமல் காவல்துறையில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத அவலநிலை நிலவி கொண்டிருக்கிறது என வருத்தம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சொல்லப்போனால் குடிநீரில் மனித மலம் கலந்திருப்பதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்பாக தூய்மை பணியாளரை எந்த ஒரு முன் பாதுகாப்பும் இன்றி வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ய சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது வன்கொடுமை சட்டம் போட்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் இறப்பு தொடர்பாக பல்வேறு மர்மங்கள் நிலை வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரை இந்தியாவை பிரிக்கிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்களோ என சந்தேகம் எழுகிறது. தான், ஈஷா விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டு வைத்தால், அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக ஒளிவு மறைவாக இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.