தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு -  வெற்றி பெறுவாரா அப்பாவு?

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் முழுவதுமாக எண்ணி முடிக்கப்பட்டு நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

supreme court

By

Published : Oct 4, 2019, 7:09 PM IST

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதி தேர்தலில் எண்ணப்பட்ட 19,20,21 ஆகிய சுற்று வாக்குகளையும், ஆயிரத்து 508 தபால் வாக்குகளையும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஏதுவாக பதிவான வாக்குகளை நீதிமன்ற பதிவாளரிடம் அக்டோபர் 4ஆம் தேதி சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி காலை 11.30 மணியளவில், மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தபால் வாக்குகளை பதிவாளரிடம் ஒப்படைக்கவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த 24 தேர்தல் அலுவலர்களை நியமித்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குச் சீட்டுகள் நீதிமன்றத்திற்கு காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி விஜிலென்ஸ் பிரிவு பதிவாளர் சாய் சரவணன் மேற்பார்வையில் மறுவாக்கு எண்ணிக்கைப் பணி தொடங்கியது. காலை சரியாக 11.30 மணிக்குத் தொடங்கிய 1508 தபால் வாக்கு எண்ணிக்கை மதியம் 4.30 மணியளவில் நிறைவடைந்தது. பின்னர், மின்னணு வாக்குப் பதிவுகளை எண்ணும் பணியில் அலுவலர்கள் அனைவரும் ஈடுபட்டனர். மாலை 6.15 மணிக்கு 36 வாக்குப் பதிவு இயந்திரங்களும் எண்ணி முடிக்கப்பட்டு நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் யாருக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதேசமயம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது வெளிாயகும், இதில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:

'கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்குக' - வைகோ வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details