சென்னை: தமிழ்நாட்டில் 13ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் குறித்து டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இன்னும் தடுப்பூசி தொடர்பான ஐயங்கள், தயக்கங்கள் மக்களிடையே இருந்து வருகிறது.
இதனைப் போக்க தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படும்.
விமான நிலையங்களில் இருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் பயணிக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வரை தமிழ்நாட்டில் உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. இதுவரை மொத்தமாக ஆறு பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் உள்ளதா இல்லையா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் வந்த பின்னரே அது பற்றிய முழு விவரம் தெரியும்.
மழை கடுமையாக பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை கவனத்தில் கொண்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிதி சென்றடைவதில் சில தடுமாற்றங்கள் உள்ளன. அவை விரைந்து களையப்படும்" என்றார்.
இதையும் படிங்க:தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகுமா?