ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் நகரிலிருந்து 359 பயணிகளுடன் இரண்டு சிறப்பு விமானங்கள் இன்று (மே. 9) அதிகாலை 1 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பயணிகளைப் பரிசோதித்து அவர்களை 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, துபாயிலிருந்து வந்த 359 பயணிகளிடமும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி சேகரிப்பு மையத்தில் தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாத ரெட்டி மேற்பார்வையில் பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் பொது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடைமுறையின்படி, அழைத்துச் செல்லப்பட்டு, விடுதிகளில் தனிமைப்படுத்தித் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.