சென்னை:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப்.5) நடைபெற்றது. இந்த விருது 390 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையில் 170 ஆசிரியர்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் 169 ஆசிரியர்களுக்கும், 37 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்களுக்கும், 2 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் 10 பேர் என 390 பேருக்கு விருது வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர் தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னுடைய இரண்டாம் பெற்றோர்களாகிய ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும் என்றார் பேரறிஞர் அண்ணா. இவ்விழாவின் நாயகர்கள் மட்டுமல்ல! வருங்கால நாயகர்களை உருவாக்கப் போகிறவர்களும் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்!
ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போது தன்னிறைவு அடைவீர்கள்? நீங்கள் பெறும் சம்பளத்தினால் அல்ல! சேர்க்கும் செல்வங்களால் அல்ல! இன்னும் சொல்லப்போனால் நீங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் சாதித்தால் கூட தன்னிறைவு அடைய மாட்டீர்கள். உங்கள் வகுப்பு மாணவன், உங்களிடம் பயின்ற மாணவன் சமூகத்தில் உயர்ந்த மனிதராக, நல்ல மனிதராக, பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக உயரும் போதுதான் நீங்கள் தன்னிறைவு அடைவீர்கள்.
நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற 2 - 3 மாதங்களுக்கு ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள், 5 மாதங்களுக்கு பிறகு, அமைச்சராகியதும் கோரிக்கைகள் எதையும் ஏற்காமல் உள்ளார் எனக் கூறினர். அதில் ஆசிரியர்கள் சங்கங்கள் நாசுக்காக கவிதை வடிவில் தெரிவித்தனர்.