தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்’- ராதாகிருஷ்ணன்

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு தெருவை அடைப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடியிருப்பு அல்லது இரண்டு மூன்று வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

By

Published : May 12, 2020, 9:00 AM IST

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொது சுகாதாரத் துறையின் கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல மருத்துவ ஆலோசனை கூட்டம் அம்மா மாளிகையில், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு,கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முழு தெருவையும் அடைப்பதை தவிர்த்து, வைரஸ் தொற்று பாதித்த பகுதி அதாவது அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இரண்டு மூன்று வீடுகளை கொண்ட பகுதிகளை மட்டும் தடுப்புகள் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது சுகாதார துறை அறிவித்துள்ள அனைத்து நடைமுறைகளையும் கடுமையாக்கி வைரஸ் தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகள் உள்ள நபர்கள் மற்றும் இதய நோய்கள் நீரிழிவு நோய்கள், ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறிந்து மருத்துவமனைக்கோ அல்லது கரோனா பாதுகாப்பு மையத்திற்கு அந்தப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை கொண்டு அழைத்து செல்ல மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மாநகராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் மறு பயன்பாடு உடைய துணியாலான முகக்கவசங்கள் நாளை முதல் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஆணையர் பிரகாஷ், வட்டார துணை ஆணையர் டாக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ், ஸ்ரீதர், ஆகாஷ் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வ வினாயகம் உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details