சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துப் பேராசிரியரும், ரேபிஸ் தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான எஸ் பரிமள சுந்தரி அளித்த பேட்டி சென்னை:ரேபிஸ் என்பது மிக ஆபத்தான உயிரியில் நோய்.ரேபிஸ் வைரஸ் நோய் தாக்கி பாதிக்கப்பட்ட நாய், பூனை, வெளவால், குரங்கு போன்ற விலங்குகள் மனிதர்களைக் கடித்தால் ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்படும் என சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துப் பேராசிரியரும், ரேபிஸ் தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான எஸ் பரிமள சுந்தரி தெரிவித்தார்.
ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், “ரேபிஸ் நோய் வைரஸ் கிருமியால் ஏற்படும் வியாதிகளில் ஒன்று. இந்த வைரஸ் கிருமி, மனிதனின் மூளையை நேரடியாக பாதிக்கும் ஆற்றல் கொண்டது. ரேபிஸ் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள், நாய், வெளவால், குரங்கு போன்ற விலங்குகள் கடித்தால் எளிதில் இந்த நோய் தொற்றும்.
நோய் தொற்று பரவ காரணம்: முக்கியமாக நாய் கடிக்கும்போது வெளியாகும் உமிழ்நீர் மூலம் பரவுதல் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றின் மூலம் மனிதர்கள் உள்பட அனைத்து பாலூட்டிகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. பெரும்பாலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி மூலம் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.
மக்களுக்கு இன்னும் இது பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லை. இந்த வியாதி வந்துவிட்டால், இந்த அறிவியல் உலகில் குணப்படுத்துவதற்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த ஒரு மிருகங்கள் கடித்தாலும், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் நோய் முற்றிலும் தடுக்கக்கூடிய நோய்.
அதனால் வரும் முன் காப்போம் என்பதன்படி தடுப்பூசியை முன்னதாகவே போட்டுக் கொள்ள வேண்டும். நோய்த்தொற்று பாதித்த விலங்குகள் கடித்தால் மட்டும் இந்த தடுப்பூசி என்பது கிடையாது. பொதுவாக எந்த ஒரு செல்லப்பிராணி கடித்தாலும், உடனடியாக 15 நிமிடம் கடித்த பகுதியைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
அறிகுறிகள்: அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவரை அணுகி, அவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் நோய் வந்தால், தண்ணீரைக் கண்டால் பயப்படுவது, காற்றாடி (Fan) வேகமாக சுற்றும்போது காற்று அதிகளவில் வந்தால் அச்சப்படுவது, வெளிச்சத்தை பார்த்தால் அஞ்சுவது.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுதல், நினைவாற்றல் வெகுவாக குறையத் தொடங்கும். இவை அனைத்தும் 3 வாரத்தில் இருந்து 3 மாதத்திற்குள் காணப்படுகிற அறிகுறிகள். இந்த அறிகுறிகள் மூலம் ரேபிஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியாலாம்.
ரேபிஸ் வைரஸ் நோய்த்தொற்று வந்து விட்டால் 100 சதவீதம் குணப்படுத்த முடியாது. இதனால் முன் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, அதனைத் தடுப்பது மட்டும்தான் ஒரே வழி. இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் ஆரம்ப காலத்திலயே தடுப்பூசி போட்டுக் கொள்ளவது மிகவும் அவசியமான ஒன்று.
தடுப்பூசி போட்டாலும், போடாவிட்டாலும் நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, அவர்கள் கூறும் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தினாலும், அதனைத் தடுக்கும் சக்தி 30 சதவீதம் மட்டுமே இருக்கிறது. எனவே, வீட்டில் வளர்க்கும் நாய்தானே, வெளியில் உள்ள நாய் கடிக்கவில்லை என அலட்சியமாக இருந்து விடக் கூடாது.
தடுப்பூசி: ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது. ரேபிஸ் நோய் தொற்றுக்கு 4 தடுப்பூசிகள் போடப்படும். பொதுவாக நாய் கடித்தால் அதனை 3 நிலையாக மருத்துவத் துறையில் பிரிப்பார்கள். நிலை 3 வரும்போது கடிபட்ட இடத்தில் மருந்து செலுத்துவார்கள். இதற்கென மருத்துவர்களுக்கு தனி பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏற்படும் ரேபிஸ் இறப்பில் 35 சதவீதம் இந்தியாவில் இறக்கின்றனர். எந்த விலங்கு கடித்தாலும் மருத்துவரை அணுகி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். உலகில் இதுவரை ரேபிஸ் நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதை நினைவில் வைத்து, விழிப்புடன் இருந்து வரும் முன் காப்பதே சிறந்தது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!