கடந்த சில நாள்களாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் வைத்தியநாதன் பாலம் முன்பு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தாங்கினார்.
கொள்ளை அடிப்பதுதான் அதிமுகவின் நோக்கம் என குற்றச்சாட்டு மேலும் இதில் சென்னை மாவட்ட மகளிர் அணியினர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததாவது, "ஒரே மாதத்தில் 100 ரூபாய் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மானியம் தரவேண்டிய நேரத்தில் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வரும்போது சிலிண்டரின் விலை 350 ரூபாயாக இருந்தது. இப்போது 710 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பை தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த விலை ஏற்றம் அதிமுக அரசுக்கு கவலை இல்லை. இன்னும் 3 மாதங்கள்தான் அதிமுகவின் ஆட்சி என்பதால் கொள்ளை அடிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளனர். பெண்கள் வீதிக்கு வந்து விட்டதால் இந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு விலை உயர்வு : சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்