செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சென்னை தலைமைச் செயலகத்தில், சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், அதன் பொதுச்செயலாளர் குஷ்பூ, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டியது தொடர்பான கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று, படப்பிடிப்பு நடத்த, அனுமதி பெற்றுத் தந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு நன்றித் தெரிவித்தனர்.
மேலும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்காக முதலமைச்சர் அறிவித்த ரூ.5 கோடி நிதியில் முதல் தவணையாக ரூபாய் 1 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூபாய் 1 கோடி நிதி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள ரூ. 50 லட்சத்தை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.