தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான இன்று, 10ஆம் வகுப்பு சமூக அறிவியல், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயிரியல் தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது. இதனால் மாநில அளவில் நடக்கவேண்டிய பொதுத்தேர்வை பள்ளி அளவிலான தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயிரியல் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இந்த மூன்று தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே சமூகவலைதளங்களில் வெளியாகிவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த கல்வித்துறை, விரைவாக ஒவ்வொரு பள்ளி அளவில் புதிய கேள்வித்தாள் வடிவமைத்து வழங்குவதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், அனைத்து பள்ளியிலும் ஒவ்வொரு வகையான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும் சென்னை மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் முன்கூட்டியே வெளியான வினாத்தாள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் பொதுத் தேர்வாக நடக்கவேண்டிய இந்த தேர்வுகள் பள்ளி அளவிலான தேர்வாக மாறியுள்ள அவலம் முதல்முறையாக நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதாக எழுதுவதற்காக அரசுத் தேர்வுத்துறையால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. இந்த வினாத்தாள்கள் மாவட்ட முதன்மைக் கல்வித்துறை அலுவலர்கள் மூலம் 10 தனியார் அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. அங்கிருந்து பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக அனுப்படுகிறது.