சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 108 வெளிநாட்டவர்கள் மீது தமிழ்நாட்டின் சென்னை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட காவல் நிலையங்களில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த உத்தரவு மற்றும் வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'சட்டம்-ஒழுங்கு மாநில அரசு சம்பந்தப்பட்டது. அதில் மத்திய அரசு தலையிடும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளில் கைது செய்யப்படுபவர்களை காவல் நிலையங்களிலேயே பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டவர்கள், ஊரடங்கால் தமிழ்நாட்டிலேயே சிக்கியுள்ளனர். அவர்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்க உத்தரவிடவேண்டும்' என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தரப்பில் வழக்குத் தொடர எந்தத் தகுதியும் இல்லை. மனு தொடர்ந்தவர் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் அல்ல. எனவே, இந்த, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து வருகிற புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.