காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி - அனைவரும் தேர்ச்சி
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சிப் பெற்றதாக கருதப்படுவார்கள் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதனால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், வருகை பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பாக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களையும், மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையும் மதிப்பெண் பட்டியல்களையும் அனுப்ப வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
இதற்கு ஆசிரியர்கள் தரப்பிலும் தனியார் பள்ளிகள் தரப்பிலும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. பழைய விடைத்தாள்கள் பள்ளிகளில் இல்லாமல் இருப்பதாகவும், தனியார் பள்ளிகளில் இதுபோன்று விடைத்தாள்களை பாதுகாத்து வைப்பதில்லை என ஆசைரியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு, பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகியவற்றிற்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவித்தனர்.
மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு வெளியில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரசாணையின்படி மாணவர்கள் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர். இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என அதில் கூறியுள்ளார்.