சென்னை: கிண்டியில் சிறுதொழில் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் www.takecareinternational.org என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நடிகர் காளி வெங்கட், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், 'கரோனா பேரிடரில் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை,
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு புறநகர் மருத்துவமனைகள், அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, கிண்டி கிங் வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனை, ஈஎஸ்ஐ அயனாவரம், கீழ்ப்பாக்கம் மனநலமருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்று முதலமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உயர் தர தங்கும் விடுதிகளில் தங்குமிடவசதியும், தரமான உணவும் வழங்கிட முதலமைச்சர் உத்தரவின்படி, மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கு உயர்தர தங்கும் விடுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில் அவர்களைத் தங்க வைக்க வேண்டுமென்றும், சென்னையில் உள்ள தரம் மற்றும் பிரசித்திபெற்ற உணவகங்களிருந்து உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களிலிருந்து உணவுக்கென்று ரூ.600 முதல் ரூ.550 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.