சென்னை:நகராட்சி நிர்வாகத்துறை இன்று(ஜன.23) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7,898 சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் 2,771 பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாயக் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அக்கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு கழிப்பறைக்கும் க்யூஆர் கோடு (QR Code) உருவாக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் இந்த க்யூஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து, அந்த கழிப்பறையில் உள்ள வசதிகள் மற்றும் குறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இத்திட்டப்படி, இதுவரை 7,954 கழிப்பறைகளில் க்யூஆர் கோடு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,715 கழிப்பறைகளில் க்யூஆர் கோடு பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதுவரை க்யூஆர் கோடு பொருத்தப்பட்டுள்ள 7,954 கழிப்பறைகள் தொடர்பாக 1,25,906 பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மற்றும் புகார்கள், சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, கழிவறைகளின் பராமரிப்பு மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கார் மீது மோதிய அரசு பேருந்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சி