சென்னை:நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்குபவர். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். குறிப்பாக தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்குவது, இரவு நேர பாடசாலைத் திட்டம், ஏழைகளுக்கு விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு ரொட்டி பால் திட்டம் உள்ளிட்டத் திட்டங்கள் தனது அரசியல் வருகையினை உறுதிபடுத்தும் விதத்தில் இருப்பதாக மக்களின் கருதுகின்றனர்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு எந்த வகையில் உள்ளது என்றும்; அதை மேம்படுத்த என்னென்ன தேவை என்பது குறித்து ஆலோசிக்க விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார் என்றும்; மேலும் நிர்வாகிகளின் செயல்பட வேண்டிய முறைகள் உள்ளிட்டவற்றை குறித்தும் அறிவுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 150க்கும் மேல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வினை மேற்கொள்ள உள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அரசியல்வாதிகள் நடிகராகும்போது, நடிகர்கள் அரசியல்வாதி ஆகக்கூடாதா: விஷால் கேள்வி?