சென்னை:தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண், காதலில் தோல்வி அடைந்திருக்கிறார். இவர், எதார்த்தமாக இணையதளங்களில் நேரத்தை செலவு செய்துகொண்டிருந்தபோது அவருக்கு ஒரு செயலி (App) அறிமுகமாகியுள்ளது. அது, “ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்” என்ற செயலி தான். காதலில் தோல்வியடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக அந்த செயலி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த இளம்பெண் அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவுசெய்து தனது காதலன் பற்றியே விவரங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட இரண்டு பேர், சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். அந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், “நாங்கள் உங்கள் காதலரோடு சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும்” என்று பணம் அல்லது தங்க நகை கேட்டுள்ளனர். அந்த இளம்பெண் தன்னிடம் இருந்த 40 சவரன் தங்க நகைகளை சென்னை விமான நிலையத்தில் வைத்து அவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள் இளம் பெண்ணை காதலனோடு சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு “நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல; மேலும் ரூபாய் ஐந்து லட்சம் பணம் வேண்டும், இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம்” என்று மிரட்டினர்.
இதனால் பதறிப்போன இளம்பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். அதன் பின்பு சென்னை விமான நிலைய காவல் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இணையதள முகவரியை ஆய்வு செய்தபோது அது பஞ்சாப் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. எனவே காவல் துறையினர், அந்த இளம்பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர்.