தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2023, 2:56 PM IST

ETV Bharat / state

6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பஞ்சாப் தொழிலதிபர் - சென்னை ஏர்போர்டில் லாக் செய்த போலீஸ்!

பண மோசடி வழக்கில் பஞ்சாப் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் 6 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் மாநில தொழிலதிபர் மலேசியா நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் தொழிலதிபர் கைது
பஞ்சாப் தொழிலதிபர் கைது

சென்னை:பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர், குல்ஜித் சிங் (36). தொழில் அதிபரான இவர் பெருமளவு பண மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இதை அடுத்து பஞ்சாப் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடி வந்தனர்.

ஆனால், குல்ஜித் சிங் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததோடு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக முயற்சி செய்கிறார் என்ற தகவல் போலீஸூக்கு கிடைத்தது. இதை அடுத்து பஞ்சாப் மாநில போலீசார் குல்ஜித் சிங்கை கடந்த 2017ஆம் ஆண்டு தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி(Look Out Circular) போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (பிப். 2) இரவு சென்னையில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

அதே விமானத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில போலீஸாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளியான குல்ஜித் சிங் மலேசியா நாட்டிற்கு தப்பி செல்வதற்காக வந்திருந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது இவர் பஞ்சாப் மாநில போலீஸாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதை அடுத்து குல்ஜித் சிங் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரை வெளியில் விடாமல் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். மேலும் பஞ்சாப் மாநில போலீஸாருக்கு 6 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கிய தகவலை தெரிவித்தனர். இதை அடுத்து பஞ்சாப் மாநில தனிப்படை போலீசார் குல்ஜித் சிங்கை பஞ்சாப் கொண்டு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஸ்கூல் யூனிபார்மில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.. புதுச்சேரியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details