புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலரும், ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் செயல்பட முடியாது. எனவே, யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை எனத் தீர்ப்பளித்தார்.
அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய உள் துறை அமைச்சகமும் தனி நீதிபதியின் தீர்ப்பைத் தடைசெய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல்செய்தனர். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் இருவரும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபின் தீர்ப்பு வழங்கினர்.