புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (மே 28) அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை புரிந்த பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை மீட்பது, நீட் தேர்வு ரத்து, தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது, உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருந்தார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கேட்டுப் பெறுவதற்கு ஒரு மாநில முதலமைச்சருக்கு உரிமை உண்டு. அதை புதுச்சேரி மாநில காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், விபரம் தெரியாமல் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த மனுவை பாஜகவினர் அரைவேக்காட்டுத் தனமாக விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது” என்றார்.
மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த நாராயணசாமி மின்துறை தொழிலாளர்களுக்கு ரங்கசாமி கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டார் எனவும் தொடர்ந்து மின் துறையை தனியார் மயமாக்கும் கைவிடாத பட்சத்தில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.