சென்னை: உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கக் கோரி கரிக்காலம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், புதுச்சேரி தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பாளர் சி. ஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அமர்வு, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரையிலான மூன்று மணி நேரத்துக்கு மாநிலத்தில் மதுபானங்கள் விற்கக் கூடாது. மதுபான விற்பனை கடைகள் மட்டுமல்லாமல் பார்களிலுள்ள ஓட்டல்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க கூடாது. அலுவலர்கள், காவல் துறையினர் தடுப்பூசி சான்று கேட்டால் பொதுமக்கள் சான்றிதழைக் காட்ட வேண்டும். பிரபலங்கள் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள கூடாது. பொதுமக்களின் நலனை புதுச்சேரி அரசு உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.