இதுகுறித்து தன்னாட்சி இயக்கம், மக்களின் குரல், அறப்போர் இயக்கம், தோழன் இயக்கம் மற்றும் இன்ஸ்டியூட் ஆஃப் கிராஸ்ரூட்ஸ் கவர்னன்ஸ் ஆகிய அமைப்புகள் கூட்டாக சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
இதுகுறித்து இந்த 5 இயக்கங்களும் சேர்ந்து வெளியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் மாநிலத்தின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெருந்தொற்றுக் காலத்தில் கூட தங்களுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை எனப் பல ஊராட்சித் தலைவர்கள் குறிப்பிடுகிறார்களே தவிர, இந்த மாதம் இவ்வளவு நிதி எங்களுக்கு மாநில நிதிக்குழு நிதியிலிருந்து வரவேண்டும் என்றோ, திட்ட நிதிகள் இவ்வளவு வரவேண்டும் என்றோ, கிராம ஊராட்சித் தலைவர்களால் குறிப்பாகச் சொல்ல முடியாத நிலையையே பரவலாகப் பார்க்க முடிகிறது.
இதற்குக் காரணம் , ஒரு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பகிர்வின் மூலம் என்னென்ன நிதிகள், எவ்வளவு வரும் என்ற தகவல் அவர்களுக்குத் தெரிவதில்லை.
கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்:
நிதிப் பகிர்வு குறித்த தெளிவின்மையால், திட்டப்பணிகள் மீதான பிடிப்பில்லாமல், பல கிராம ஊராட்சித் தலைவர்கள், பெரும்பாலான சமயங்களில் மாநில,மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் சொல்வதையெல்லாம் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டு, இயங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.
வெளிப்படைத்தன்மை அவசியம்:
கடந்த 2017ஆம் ஆண்டில் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் மாநில அளவிலேயே உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய நிதியில் 20 விழுக்காடு நிதியை அரசு எடுத்துக்கொண்டது.