சென்னை: 2023-24ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்பிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடுக்கான ஆணைகள் வழங்கும் விழா கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஜூலை 27) தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்; “2023-2024ம் கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ (MD/MS/DIPLOMA, DNB & MDS) பட்டப்படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களில் மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க ஜூலை 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, வரவேற்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இன்று (ஜூலை 27) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
MD/MS/DIPLOMA அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு (PG Government Quota) 8376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 7526 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், MD/MS/DIPLOMA அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் (PG Management Quota-வுக்கு) 3688 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க:அத்திப்பட்டி போல் மாயமான 5 கிராமங்கள்.. வாக்குரிமை இருந்தும் நிர்கதியாய் நிற்கும் மக்கள்!
மேலும், MDS அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் (MDS Government Quota-வின் கீழ்) 779 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 661 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், MDS சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் (MDS Management Quota) கீழ் 446 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.