இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதனடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வு ஆகியவற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை ஆகியவை தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (நேர்காணல்) குரூப் 2 பணியிடங்களில் ஆயிரத்து 334 நபர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் 10 பேருக்கு வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நேர்காணல் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் உதவி கணினி பொறியாளர் பணியில் 36 நபர்களும், உதவி கணினிப் பகுப்பாய்வாளர் பதவியில் 24 நபர்களையும் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு, வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியல் ஆகியவையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் ஜவுளிகள் சார்நிலைப் பணியில் ஐந்து பேரும், கைத்தறிகள் மற்றும் ஜவுளித்துறை முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 14 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் 46 பேருக்கு நேர்காணலும் ஏழு பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வு ஆகியவையும் வரும் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வித்துறையில், மாவட்டக் கல்வி அலுவலர் பதவியில் 20 நபர்களை நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 41 பேருக்கான நேர்காணல் தேர்வு, வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும்.
தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி தொழில்துறையில் தொல்லியல் அலுவலர் பதவியில் 18 நபர்களை நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு, 2020, பிப்ரவரி மாதம், 29ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியல் ஆகியவையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, தமிழ்நாடு பொதுப்பணி மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தின் திட்ட அலுவலர், தமிழ்நாடு சிறைப் பணி உதவியாளர், தமிழ்நாடு சிறை சார்நிலைப்பணி அலுவலர் பதவிகளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு, வருகின்ற ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அன்லாக் 5.0: திரையரங்குகளை திறக்க அனுமதி