சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னையில் தொடர் கரோனோ தடுப்புப் பணிகள், காய்ச்சல் முகாம்கள் மூலமாக நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. 16 ஆயிரத்து 116 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில், 10 லட்சத்து 80 ஆயிரத்து 805 பேர் பயன்பெற்றுள்ளனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 283 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநகராட்சிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.
சென்னை மாநகரில் தொற்று குறைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் தொற்று அதிகரித்துவரும் சூழலில் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி, பொதுப் போக்குவரத்து இன்னும் சில நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசி, கொண்டைக்கடலை பொதுமக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். மாநிலத்தில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படுகின்றன” என்றார்.