சென்னை: சென்னை விமான நிலையில் அதிநவீன வசதிகளுடன் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாசற்ற ஒரு நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, தமிழ்நாட்டு கலாச்சாரம், புரதாண நினைவுச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள் போன்றவைகளின் ஓவியங்களுடன், கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இனிமேல் 30 மில்லியன் பயணிகள் பயணிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன் பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்டர்கள் பயணிகள் உடமைகள் வரும் கண்வயர் பெல்ட்கள் 6, அதிநவீன லிப்ட்டுகள் 17, எஸ்கலெட்டர்கள் 17, வாக்கலேட்டர்கள் 6, பயணிகள் உடைமைகள் பரிசோதனை அதிநவீன கருவிகள் 3 போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப் படுத்தப்பட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு ஓடுபாதையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் முதல் சோதனை ஓட்டம் வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி செவ்வாய் அன்று தொடங்குகிறது.
அன்று பகல் 12:55 வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும் யூஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம் முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கி பயணிகள் வருகை பகுதி வழியாக வெளியில் வருவார்கள். அதே விமானம் பிற்பகல் 1:55 மணிக்கு, புதிய முனையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டு செல்லும்.
அதைத் தொடர்ந்து வேறு சில விமானங்களும் சோதனை அடிப்படையில் இந்த புதிய முனையத்தில் இயக்கப்படும். ஆனால் சிறிய ரக விமானங்கள் மட்டுமே சோதனை காலங்களில் இங்கு வந்து செல்லும். சோதனை ஓட்டம் வெற்றி பெறும் நிலையில் வருகின்ற மே மாதத்தில் இருந்து இந்த புதிய முனையத்தில் பெரிய ரக மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும்.
ஏற்கனவே பழைய முனையத்தில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகங்கள், அரசுத் துறைகளான போலீஸ், பாதுகாப்பு, உளவுத்துறை உள்ளிட்ட அலுவலகங்களும் இந்த புதிய முனையத்திற்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதோடு புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக டூட்டி ஃப்ரீ ஷாப் உணவு ஸ்டால்கள் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவைகளும் ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்து இந்த புதிய முனையத்தில் செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முனையம் செயல்பட தொடங்கிய பின்பும் சில காலம் பழைய முனையம் செயல்பாட்டில் ஒரே நேரத்தில் புதிய பழைய முனையங்கள் செயல்படும். இந்தப் புதிய முனையம், முழு செயல்பாட்டுக்கு வந்த பின்பு ஏற்கனவே சர்வதேச முனையமாக உள்ள டி4 உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். அதோடு டி3 எனப்படும் தற்போதைய சர்வதேச முன்னையத்தின் வருகை பகுதி கட்டிடங்கள் உடைக்கப்பட்டு, இரண்டாம் கட்ட பணியான, ஃபேஸ் 2 கட்டடப் பணிகள் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏப்.30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி அதிரடி ஆஃபர்!